Sunday, July 22, 2012

பெருமாளை சுற்றி வருவது ஏன்?

நட்சத்திர சத்ரயாகம் நடந்து முடிந்ததும், தம் ஆசனத்தில் அமர்ந்தார் சூதபுராணிகர். அவரைச் சுற்றி வந்தமர்ந்தனர் பல முனிவர்கள். அவர்களில் ஒரு முனிவர், "பாவ ஜென்மமான நாய், வைகுந்த பதவி அடைய முடியுமா?' என்று சூதபுராணிகரிடம் கேட்டார். "ஓ... முடியுமே!' என்று சொல்லி, ஒரு சின்ன கதையை சொன்னார்: 

ஒரு கிராமத்தில், ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அதன் வாசலில், ஒரு நாய் படுத்துக் கொண்டிருப்பது வழக்கம். தினமும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதத்தை, பக்தர்களுக்கு வழங்குவர். அந்த பிரசாதத்தை சாப்பிட்டபடி, பெருமாளை சுற்றி வருவர் பக்தர்கள். அப்படி வரும்போது, அந்த பிரசாதம் கோவில் பிரகாரத்தில் சிந்தி விடும். பிரசாதத்தை பொறுக்கி சாப்பிட்டபடி, பிரகாரத்தை சுற்றி வரும் அந்த நாய். இப்படியே பல நாட்கள் பிரசாதத்தையும் சாப்பிட்டு, பெருமாளையும் சுற்றி வந்தது. 

ஒரு நாள், அது மரணமடைந்தது. அந்த ஜீவனை, தர்மராஜன் முன் நிறுத்தினர் எமதூதர்கள்.கணக்கை பார்த்துவிட்டு, "இந்த நாய், பெருமாள் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, பெருமாளையும் பிரதட்சணம் செய்துள்ளதால், இது, வைகுந்தம் போக வேண்டும்...' என்றான் சித்ரகுப்தன். பூலோகத்தில், சாட்சி தேவதைகள் என்று சில தேவதைகள் சுற்றி வருவதுண்டு. யார், யார் என்ன புண்ணியம், பாவம் செய்துள்ளனர் என்று தெரிந்து, தர்மராஜன் சபைக்குப் போகும். சித்ரகுப்தன் ஒவ்வொரு ஜீவனும் செய்த பாவ புண்ணியங்களை, தர்மராஜனிடம் தெரிவிப்பான். சாட்சி தேவதைகளைப் பார்த்து, "இது நிஜமா!' என்று கேட்டான் தர்மராஜன். சாட்சி தேவதைகளும், "ஆமாம்!' என்றனர். 

அதன்பின் அந்த நாயின் ஆத்மா, வைகுந்தம் போகலாம் என்று தீர்ப்பு வழங்கினான் தர்மராஜன். உடன் விஷ்ணு தூதர்கள் வந்து, அந்த ஜீவனை வைகுந்தம் அழைத்துப் போயினர். எந்த ஜீவனாக இருந்தாலும், பெருமாள் பிரசாதத்தை உண்டு, பெருமாளை சுற்றி வந்தால் போதும், வைகுந்த பதவி கிடைக்கும் என்று இந்தக் கதையை சொல்லி முடித்தார் சூதபுராணிகர். இதைக் கேட்ட முனிவர்கள், "பெருமாள் பிரசாதத்துக்கும், பெருமாளை சுற்றி வருவதற்கும் இவ்வளவு புண்ணியம் உள்ளதே!' என்று ஆச்சரியப்பட்டனர்.

Wednesday, June 27, 2012

தொழிலாளி செய்யும் தவறுக்கு யார் பொறுப்பு?

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி பணியில் தவறு செய்து விடுகிறான். இதனால் அந்த நிறுவனத்திற்கு சிறிது நஷ்டம் ஏற்படுவதுடன், கெட்ட பெயரும் ஏற்படுகிறது. இப்படி ஏற்பட்ட அந்த தவறுக்கு யார் பொறுப்பாளி? என்பதை ஒரு புராணக்கதை மூலம் தெரிந்து கொள்வோமா?

விபீஷணனை காட்டில் சில அந்தணர்கள் சிறைபிடித்து விட்டதாக ராமர் கேள்விப்பட்டார். அந்தணர்களிடம் நேரில் சென்ற ராமர், அங்கு கை, கால் கட்டப்பட்ட நிலையில் அவர் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். ராமரைக் கண்ட அந்தணர்கள் அவரது திருவடியில் விழுந்து வணங்கி வரவேற்றனர். காட்டில் கிடைத்த கனிவகைகளை கொடுத்து உபசரித்தனர்.

விபீஷணரைத் தேடித் தான் ராமர் வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தனர். அவரிடம் சுவாமி! தர்ப்பை சேகரிப்பதற்காக வயோதிக அந்தணர் ஒருவர் வனப்பகுதிக்கு வந்திருந்தார். அவர் எப்போதும் மவுன விரதம் மேற்கொள்பவர். அப்போது தேரில் வந்த இந்த அரக்கன் அவருடன் பேச முற்பட்டான். ஆனால், அவரோ மவுனம் காத்தார். கோபம் கொண்டு காலால் அவரை உதைத்து விட்டான். நிலைகுலைந்து விழுந்த அந்தணரின் உயிர் போய்விட்டது. அதனால் இவனைக் கட்டி வைத்தோம். எங்களின் நல்லகாலம். உத்தமரான நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். கொலைகாரப்பாவியான இவனுக்கு தண்டனை வழங்குங்கள், என்று கேட்டுக் கொண்டனர். விபீஷணன் தலை குனிந்து நின்றான். 

ராமர் அந்தணர்களிடம்,இவன் என்னுடைய பணியாளன்.ஒரு பணியாளனின் செய்கைக்கு எஜமானான நானே பொறுப்பாளி. இவனுக்கு கொடுக்க நினைக்கும் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன், என்றார். இதைக் கேட்டு அந்தணர்களின் உள்ளம் நெகிழ்ந்தது. விபீஷணனுக்கு அவரைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பதையும், அவருடைய மரணம் தற்செயலாக நடந்தது என்பதையும் உணர்ந்தனர். விபீஷணனை விடுவித்து ராமருடன் அனுப்பி வைத்தனர்.

Monday, June 4, 2012

மனைவிக்கு துரோகம் செய்கிறீர்களா?

ஒரு சமயம் பார்க்கவர் என்ற முனிவர், தன் புத்திரன் ஜடமாக இருப்பதைப் பார்த்து, "நீ ஏன் இப்படி ஜடமாக இருக்கிறாய்? வேதம் படித்தும், குரு சிஷ்ருதை செய்தும், பிச்சை எடுத்தும் ஆத்ம லாபம் தேடிக்கொள்...' என்றார். அதற்கு அந்தக் குழந்தை, "தந்தையே... நான் இதற்கு முன், எத்தனையோ ஜென்மாக்கள் எடுத்தாகி விட்டது. பூர்வ ஜென்மத்தில் பரமாத்மாவிடம் என் ஆத்மாவை வைத்து, ஆத்ம விசாரணை செய்து ஞானம் பெற்றேன். இப்போது இந்த ஜென்மா கிடைத்துள்ளது. இனி, நான் எதையும் கற்றுணர வேண்டும் என்பதில்லை. இந்த ஜென்மாவில், மேலும் ஞானத்தால் பகவானை அடைவேன். இனி, பிறவி இராது.

"பூர்வ ஜென்மங்களின் புண்ணிய வசத்தால், எனக்கு பூர்வ ஜென்மங் களில் நிகழ்ந்தவை ஞாபகம் உள்ளது. பல ஜென்மங்களுக்கு முன், நான் ஒரு வைசியனாக இருந்த போது, ஒரு பசுவை கட்டிப்போட்டு, தண்ணீர் கொடாமல் இருந்து விட்டேன். அந்தப் பாவத்துக்காக, எனக்கு நரகலோக வாசம் ஏற்பட் டது. நரகத்தில், என்னைப் போல் பல பாவிகளும் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தனர்
.
"இங்கிருந்து எப்படி விடுதலை கிடைக்கும் என்று எல்லாருமே ஏங்கி அழுது கொண்டு இருந்தோம். அந்த சமயம், திடீரென்று, குளிர் காற்று வீசியது. இது எப்படி ஏற்பட்டதென்று பார்த்தேன். அப்போது எம தூதர்கள், ஒரு புண்ணிய புருஷனை அங்கு அழைத்து வந்தது தெரிந்தது. அந்த புண்ணிய புருஷன் வந்ததால், இங்கு குளுமையான காற்று வீசியதாக தெரிந்து கொண்டேன். அந்த எம தூதன், புண்ணிய புருஷனுடன் வரும்போது, நரகலோகத்தை காண்பித்தபடி வந்தான்.

"நரகவாசிகள், அந்த புண்ணிய புருஷனிடம், "ஐயா... நீங்கள் போய் விடாதீர்கள். இங்கேயே இருங்கள். நீங்கள் இருப்பதால், இங்கு எங்களுக்கு குளிர்ச்சியும், சுகமும் ஏற்படுகிறது...' என்று கூறினர். அவரும் அப்படியே நின்று, எம தூதர்களை பார்த்து, "நான் பல யாக யக்ஞங்கள் செய்துள்ளேன். தான தர்மம் செய்திருக் கிறேன். நான் விபச்சித் என்ற அரசனாக இருந்த போது, குடிமக்களை நீதியுடன் பரிபாலனம் செய்தேன். அப்படி இருக்கும்போது, என்னை ஏன் நரக லோகத்துக்கு அழைத்து வந்தீர்...' என்று கேட்டார்.

"அதற்கு எம தூதன், "ஐயா... நீர் சொல்வதெல்லாம் உண்மை! ஆனாலும், நீர் உம்முடைய மனைவி ஒருத்திக்கு, தவறு செய்து, துக்கப்படும்படி செய்து விட்டீர். ஒரே ஒரு சமயம் தான் அப்படி செய்தீர். இருந்தாலும், அது பாவம் தான். அதனால்தான் உமக்கு நரகலோக வாசம் இல்லாவிட்டாலும், நரகலோகத்தை பார்க்கும்படியான சின்ன தண்டனை கிடைத்து உள்ளது. இப்போது பார்த்தாகி விட்டது. இனி, நீர் செய்த புண்ணிய பலனை அனுபவிக்கலாம். அதோ விமானம் வருகிறது...' என்றான் எமதூதன்.

"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் இங்கிருப்பதால் இத்தனை பேர்களுக்கும் சுகம் ஏற்படுகிறது. ஆகவே, நான் இங்கேயே இருந்து விடுகிறேன். நரகமானாலும், பிறருக்கு உதவி செய்வதற்காக நான் இங்கேயே இருந்து விடுகிறேன்...' என்றார்."இவர்களுக்கு ஏதாவது புண்ணியம் இருந்தால் இங்கிருந்து விடுதலை கிடைக்கும். புண்ணியமில்லாத போது, நரக வாசம் தான்! நீங்கள் வந்து விமானத்தில் ஏறி, சுவர்க்கம் செல்லுங்கள்...' என்றான் எம தூதன்.

"அதற்கு அந்த புண்ணியவான், "ஐயா... நான் செய்த புண்ணியங்களில் ஒரு பகுதியை இவர்களுக்கு அளிக்கிறேன். இவர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்யுங்கள்...' என்றார். அதேபோல் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானம் செய்தார். அந்த புண்ணிய பலன் கிடைத்ததும், பாவிகளுக்கு விடுதலை கிடைத்தது, அந்த புண்ணியவானும் விமானம் ஏறி சுவர்க்கம் சென்றார். அந்தக் கூட்டத்தில், நானும் ஒருவனாக இருந்ததால் நரகத்திலிருந்து எனக்கும் விடுதலை கிடைத்தது.

"அதன் பின், பல ஜென்மங்கள் எடுத்து, நல்ல புத்தியோடு வாழ்ந்து, பகவானை வழிபட்டு, ஞானம் வர ஆரம்பித்தது. பூர்வ ஜென்மத்தை நல்ல முறையில் வாழ்ந்து, ஞானத்தை வளர்த்தேன். ஏதோ ஒரு கர்ம பலன், இந்த ஜென்மா கிடைத்துள்ளது...' என்றது அந்தக் குழந்தை. 

இப்படி ஒரு சின்ன கதை உள்ளது. இங்கு அதை ஏன் சொல்கிறோம் என்றால், எந்த பாவம் செய்தாலும் தண்டனை உண்டு; அதனால், ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது.

Sunday, May 20, 2012

கடமைக்காக கோவிலுக்குச் செல்லாதீர்!

"ஆடு காண், போகுது பார்...' என்றார் ஒரு சித்தர். அப்படி என்றால் என்ன? ஆடு போகுது, அதைப் பார் என்று சொன்னாரா? இல்லை. சித்தர்கள் சொல்வ தெல்லாம் மக்களின் நன்மைக்குதான். ஆடு என்றால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடு; 

காண் என்றால் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய், பகவானை தரிசனம் செய் என்று அர்த்தம். இப்படிச் செய்வதை, "போகுது பார்' என்றனர். போகுது பார் என்றால், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, கோவில்களுக்கு சென்று, பகவானை தரிசனம் செய்தால், பாவங்கள் தொலையும் என்று பொருள் கூறினர். 

நமக்கு அதில் ஈடுபாடு உண்டு தான். ஒரு டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. மூன்று நாட்களில், 40 ஸ்தலங்கள் என்கின்றனர். அவர்கள் சொல்லும் பணத்தைக் கொடுத்துவிட்டு அதில் செல்கிறோம். போகும்போதே நமக்கு கோவில், தெய்வ தரிசனம் இவைகளில் புத்தி போகிறதா? "அடுத்து நல்ல ஓட்டல் எப்போது வரும், பஸ் நிற்கும் இடத்தில் உள்ள ஓட்டலில், காபி நன்றாக இருக்குமா, மசால் தோசை கிடைக்குமா?' என்று தான் யோசனை போகிறது. 

எப்படியோ, ஒரு கோவில் வாசலை பஸ் அடைந்து விடுகிறது. உடனே எல்லாரும் இறங்குவர். "சார்... பஸ் இங்கே அரை மணி நேரம் நிற்கும். அதற்குள் கோவிலுக்குப் போய்விட்டு வந்து விடுங்கள்...' என்பார் பஸ் கண்டக்டர். பஸ்சிலிருந்து இறங்கியவர்கள், 

முதலில், டாய்லெட் எங்கே இருக்கிறது என்று தேடுவர். அது முடிந்ததும், நல்லதா ஒரு காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். நல்ல ஓட்டல் எங்கே இருக்கிறது என்று தேடி போவர். 

காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குள் போகிறவர், வெளியில் உள்ள குளத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து, தலையில் தெளித்து; அவசர அவசரமாக போவர். இவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சன்னிதி திறந்திருக்கும்; சுவாமி தரிசனம் செய்வர். அதிர்ஷ்டம் இல்லாவிட்டால், சன்னிதியில் திரை போட்டிருக்கும். "திரை விலக ஒரு மணி நேரமாகும்...' என்று குருக்கள் சொல்வார். 


சரி... அவ்வளவு நேரம் இருக்க முடியாது என்று, திரையை தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவர். இதற்குள் பஸ் டிரைவர் மூன்று, நான்கு தடவை ஹாரன் அடிப்பார். கோவிலுக்கு வந்தவர்கள், அவசர அவசரமாக ஓடி வந்து பஸ்சில் உட்கார்ந்து விடுவர். பஸ் டிரைவரும், கண்டக்டரும் இலவச டிபன், காபி சாப்பிட்டு வந்திருப்பர். 


உடனே, பஸ்சை ஸ்டார்ட் செய்து, எல்லாரும் வந்தாச்சா என்று கேட்டு, பஸ்சை கிளப்பி விடுவர். இப்படி டூர் போனால், ஆடாவது காணாவது, பாவம் போவதாவது! எந்த ஷேத்திரத்துக்குப் போனாலும் அங்கே மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்பது சாஸ்திரம். இந்தக் காலத்தில் இது சாத்தியமா? எல்லாமே அவசரம் தான்! 


நன்றி - வாரமலர்

Monday, May 14, 2012

கருடபுராணம் - நான்கு லட்சம நரகங்கள் !

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். 



வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர்.




உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும்.


ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும். 





Friday, March 16, 2012

விரைவில் கருட புராணம் தமிழில் ! பதிவுகளை பெற இத்தளத்தில் கீழே  இனைந்து கொள்ளவும் !