Friday, July 26, 2013

சாஸ்திரங்களில் சொல்வதை கடைபிடியுங்கள்!

மனித வாழ்க்கையில் எது நல்லது, எது கெட்டது என்பதை, நம் முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஆனால், நாம் அவைகளை சரியாகப் பின்பற்றாமல், சில துன்பங்களுக்கு ஆளாகிறோம். நாம் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சில வழி காட்டுதல்களையும், நீதி நூல்களையும் இயற்றி உள்ளனர். அவைகளை நாம் பொருட்படுத்து வதில்லை.

குடியைப்பற்றி ஒரு பாடல் உள்ளது..."கள் விலைப் பகர்வோர், கள்ளினை நுகர்ந்தோர், கள் அருந்துதற்கு உடன்படு வோர், கள் அருந்தினரை மகிழ்வோர் நரகில் கற்ப காலம் கிடந்த முந்தி, தீய மலப்புழு வாகி, மலத்தினை உழன்று உழன்று நாள் கழிப்பர்...' என்பது பாடல். கள் அருந்துவது எவ்வளவு கேவலம் என்பது இதன் மூலம் தெரிகிறது. 

இதை ஒருவரிடம் கூறியபோது, "இது, கள் குடிப்பவர்களுக்கு தான் சொல்லப்பட்டது. எனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை; ஏனென்றால், நான், கள் குடிப்பதில்லை; பிராந்தி, விஸ்கி போன்றவைகளைத் தான் குடிக்கிறேன்...' என்றார். எப்படி இருக்கிறது இவரது வாதம்!

தாசி வீட்டுக்கு போனார் ஒருவர். அவளை அணைத்துக் கொள்ள முயன்றார். தாசி கொஞ்சம் படித்தவள்; சாஸ்திரம் தெரிந்தவள். "ஐயா... இப்படி என்னைக் கட்டி அணைத்தால், எம லோகத்தில் பழுக்கக் காய்ச்சியிருக்கும் இரும்புத்தூணை கட்டி அணைக்கச் சொல்லி தண்டனை கொடுப்பராம்...' என்றாள். அதற்கு அவர், "போடி அசடே... இப்படி எப்போது சொல்லப்பட்டது? முன் யுகத்தில், அதாவது, பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டது. அப்போது அந்த தூண் பழுக்கக் காய்ச்சின இரும்பாக இருந்திருக்கும். இப்போது, இத்தனை வருடங்களுக்குப் பிறகும், அந்தத் தூண் அப்படியே பழுக்கக் காய்ச்சிய சூட்டோடு இருக்குமா? ஆறிப் போய் இருக்கும்; அதனால், நீ கவலைப்படாதே...' என்றார்.

இப்படி நீதிகளையும், சாஸ்திரங்களையும், தம் பழக்க வழக்கங்களுக்கு சாதகமாக வாதாடிக் கொண்டிருந்தால், யாருக்கு நஷ்டம்? ஒரு வேளை, தான் செய்த தவறுக்கு யம லோகத்தில் தண்டனை பெற வேண்டி இருந்தால், அப்போது அதை அனுபவித்து தானே ஆக வேண்டும். "திரும்பி வந்து நல்ல காரியம் செய்துவிட்டு வருகிறேன்...' என்றால், அங்கே விட மாட்டார்கள். இப்போது செய்துள்ள பாவத்துக்கு தண்டனை அனுபவித்து விட்டுப் போ; மீண்டும் நல்ல காரியம் செய்து, புண்ணியம் தேடிக்கொண்டு இங்கு வந்தால் சுகப்படலாம்...' என்பர்.

அதனால், சாஸ்திரங்களில் சொல்லியபடி, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து விட்டால், பரலோகத்தில் சுகமாக இருக்கலாம். பூலோக சுகம் நிரந்தரமான தல்ல... பரலோக சுகம் தான் நிரந்தரமானது; அதற்குத்தான் நாம் முயற்சி செய்ய வேண்டும்.


நன்றி - வாரமலர்