Sunday, December 28, 2014

பிரச்னை தீர வேண்டுமா ?


மனித வாழ்க்கை பல பிரச்னைகள் நிறைந்தது. இரவு நேரம் வந்ததும், இன்று என்னென்ன செய்தோம், எதெல்லாம் விட்டுப் போயிற்று, எதெல்லாம் நினைத்தபடி நடந்தது, எதெல்லாம் நினைத்தபடி நடக்கவில்லை என்று சிந்திக்கிறான் மனிதன்; மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போடுகிறான்.


அவைகளில் எதெல்லாம் நடக்குமோ தெரியாது. இப்படி பல பிரச்னைகளில் சிக்கி, என்ன செய்வது என்று தெரியாத ஒரு சிலர், "ஹூம்... எப்படியோ நடக்கட்டும். பகவான் விட்ட வழி...' என்று சொல்லி, பொறுப்பை பகவானிடம் ஒப்படைத்து விடுவர். நம்மை நம்பியுள்ள பக்தனின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறான் பகவான்; அதற்கு, சில வழிமுறைகளை சந்தர்ப்பங்களாக ஏற்படுத்துகிறான். பிரச்னைகள் தீர வழி வைக்கிறான். இதுதான் பகவான் விட்ட வழி என்கின்றனர். 
நம்பினவர்களுக்கு வழி செய்தும் கொடுக்கிறான்; தவறான வழியில் போகிறவனை தடுத்தும் நிறுத்துகிறான் பகவான். வழி தெரியாதவர்களுக்கு வழியும் காட்டுகிறான்; திக்கு திசை தெரியாமல் விழிப்பவர்களுக்கு, வேறு உருவில் வந்து, வழிகாட்டியாக அழைத்துச் செல்கிறான். சேரவேண்டிய இடம் வந்ததும் மறைந்து விடுகிறான்.
ஹரதத்தர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இருக்குமிடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருந்த சிவன் கோவிலுக்கு, தினமும் போவது வழக்கம். ஒருநாள் மாலை, கோவிலுக்கு புறப்பட்ட போது, இடி, மின்னலுடன் காற்றும், மழையுமாக இருந்தது. அதில், கோவிலுக்கு போகும் வழியை தவற விட்டு விட்டார். எந்த வழியில் போவது என்று தெரியாமல், தடுமாறிக் கொண்டிருந்தார். 
அந்த சமயம், ஒரு இடையன் அங்கு வந்தான். "ஐயா... நீங்கள் கோவிலுக்கா போக வேண்டும்?' என்று கேட்டான். "ஆமாம்! ஆனால், வழி தெரியவில்லை...' என்றார் தத்தர். "சரி... நானும் அங்கே தான் போகிறேன்; என்னோடு வாருங்கள்...' என்றான் அவன். இருவரும் கோவில் வரை சென்றனர்.  அந்த இடம் வந்ததும், வழிகாட்டியாக வந்த இடையன் மறைந்து விட்டான். இவர் சுற்றும், முற்றும் தேடிப் பார்த்தார்; ஆளைக் காணவில்லை. அப்போது தான் அவருக்குப் புரிந்தது... வழிகாட்டியாக வந்தது இடையன் அல்ல; சாட்சாத் பரமேஸ்வரன் தான் என்று. கோவிலுக்குள் போய் பகவானை தரிசித்து, பலவாறு துதித்தார்.


பகவான் வழிகாட்டியாக வந்தார். சரி... ஆனால், ஏன் சுய உருவில் வராமல், இடையனாக வந்தார்? அதுதான் ரகசியம். "பகவான் எப்படி இருப்பார்!' என்று, மனதால் நினைக்கும்போது தான், பக்தி செய்ய முடியும்.  பரமேஸ்வரனே புலித்தோல், மண்டையோடு, நெருப்பு சட்டி, சூலம் எல்லாவற்றோடும் இவன் எதிரில் தோன்றினால் என்ன ஆகும்? ஆள் அலறி அடித்து ஓட்டமாக ஓடி விடுவான். பகவான் நேரில் வந்ததற்கு, பயன் எதுவும் இருக்காது. அதனால், மனித உருவில் வந்து, வழிகாட்டிவிட்டுப் போய் விடுகிறார். அந்தக் காலத்தில், பகவான் நேரில் தரிசனம் கொடுத்தார்; வரம் கொடுத்தார் என்றெல்லாம் புராணங்களில் உள்ளது. ஆனால், இந்தக் காலத்தில் அதெல்லாம் சரிப்பட்டு வராது. பகவான், இப்போதெல்லாம் நேரில் வர மாட்டார். மனித உருவில் வந்து, நல்வழி காட்டி விட்டுப் போய் விடுகிறார்.

Sunday, December 21, 2014

வாயில்லா ஜீவன்களுக்காக

மனிதன் முதல் புழு, பூச்சி வரையில் உள்ள சகல ஜீவராசிகளும், ஏதோ ஒரு காரணமாக பிறக்க நேரிடுகிறது என்பர். அப்படி பிறவி எடுத்த ஜீவன்களில், மனிதர் மட்டுமே அறிவு பெற்றவர்களாகவுமிருந்து நற்கதியடையவே விரும்புவர்; இதர ஜீவன்களுக்கு, இப்படியொரு எண்ணம் ஏற்பட வழியில்லை. அதிக பாவம் செய்த இப்படிப்பட்ட ஜீவன்கள் கர்ம வினைப்படி, பல ஜென்மமெடுத்து வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
ஏதோ அபூர்வமாக ஒரு சில ஜீவன்கள்... யானை, கோழி, சிலந்தி போன்றவை, ஏதோ ஒரு மகானின் அருள் பெற்றோ, புண்ணிய தீர்த்தங்களின் சம்பந்தத்தாலோ நற்கதி அடைந்ததாக புராணங்களிலும், சரித்திரங்களிலும் காண்கிறோம். இப்படிச் செய்தால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்று நம்பி, சில காரியங்களைச் செய்கிறோம்.
ஒரு மகான் இருந்தாராம். அவருக்கு ரொம்பவும் இளகிய மனசு. சிறு ஜீவன்களிடம் அன்பும், இரக்கமும் உள்ளவர். சாப்பிடும்போது எதிரில் எது வந்தாலும், அதற்கும் சிறிது போடுவார். "பாவம்... அதுவும் ஒரு ஜீவன் தானே...சாப்பிடட்டும்!' என்பார். 
ஏதாவது ஒரு ஜீவன், நாயோ, பூனையோ, ஆடோ, மாடோ விபத்தில் அடிபட்டு இறக்க நேரிடுவதைப் பார்த்தால், ரொம்பவும் வேதனைப்படுவார்... "பகவானே... இதற்கு நல்ல கதியை கொடுப்பா!' என்று பிரார்த்திப்பார். இதென்னடா பைத்தியக்காரத்தனம் என்று, மற்றவர் எண்ணலாம். 
ஆனால், அவர்,  "ஐயா... இந்த ஜீவனுக்கு நல்ல கதியைக் கொடு...' என்று  நாம் மனமாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இந்த ஜீவனுக்கு மரண காலத்தில் பகவான் நாமாவைச் சொல்லவோ, எண்ணவோ முடியாது. இந்த ஜீவனின் மரண காலத்திலாவது, நாம் பகவானிடம் இதற்கு நல்ல கதியைக் கொடு என்று பிரார்த்திக்கலாமே! 
"நம்முடைய பிரார்த்தனையை ஏற்று, பகவான் அதற்கு நற்கதியளித்தால் அளிக்கட்டுமே! ஒரு ஜீவன் நற்கதியடையும்படி செய்த புண்ணியமாவது கிடைக்கட்டும். புண்ணியம் இல்லாவிட்டாலும் ஒரு ஜீவன் நற்கதி பெறட்டுமே!' என்பார். 
இப்படி துன்பப்படும் ஜீவன்கள் எதைக் கண்டாலும் அவர் பிரார்த்திப்பது வழக்கம். மனிதர்களில் எத்தனை பேர் இப்படி, பிற ஜீவன்களுக்காகப் பிரார்த்திக்கின்றனர். ரொம்ப, ரொம்ப அபூர்வம். நல்ல உள்ளம் கொண்ட ஓரிரு நல்லவர்களே உள்ளனர் எனலாம். அவர்களிடம் தான் இந்த குணம் உண்டு!         

Sunday, December 14, 2014

அநித்தாமிஸ்ர நரகம்-2

கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.