Monday, January 13, 2014

சிபாரிசு எல்லாம் இங்கே கிடையாது !

பகவான், மனித ஜென்மாவை கொடுத்திருக்கிறான். இந்த ஜென்மாவில் தான், ஒருவன் பாவங்களைப் போக்கி, புண்ணியத்தை தேடிக் கொள்ள முடியும். மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளவும் பல வழிகள் உள்ளன. தீர்த்த யாத்திரை, ஷேத்ர தரிசனம் போன்றவைகளால் பாவங்கள் விலகும் என்பர். அவ்வப்போது, வசதிக்கு ஏற்ப, சிறு, சிறு தான தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், வாழ்நாளில், செய்த புண்ணியம் குவியலாகி விடும்.
ஒருவன், ஏதோ ஒரு இடத்தில், ஒரு கிரவுண்டு வாங்கிப் போடுகிறான். நாலைந்து வருஷம் கழித்து, வீடு கட்டலாம் என்று அங்கே போய் பார்க்கிறான். இவனுடைய கிரவுண்டில், ஆள் உயரத்துக்கு ஒரு புற்று உண்டாகியிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டது? கரையான், ஒவ்வொரு மணலாக, கொஞ்சம் கொஞ்சமாக, இந்தப் புற்றைக் கட்டி விட்டது. இப்போது, இதை இடிக்க வேண்டுமானால், நாலு ஆள், கடப்பாரை எல் லாம் வேண்டும். இடித்த மண்ணை அப்புறப்படுத்த ஒரு லாரியே வேண்டியிருக்கும். கரையான் சுலபமாக இவ்வளவு பெரிய புற்றை கட்டி விட்டது ஆச்சரியமாக இல்லையா?
இதே போலத் தான் மனிதனும், வாழ்நாளில் சிறுசிறு தர்மங்களைச் செய்து கொண்டே வந்தால், அதுவே ஒரு பெரிய புண்ணிய மூட்டையாகி விடும். இந்த புண்ணிய மூட்டை தான் பரலோகத்திலும் சரி... அடுத்த பிறவியிலும் சரி, இவனுக்கு உதவும். 
ஒருவன் வாழ்க்கையில் சுகமாக இருக்கிறான் என்றால், "அவனுக்கென்ன, பூர்வஜென்ம புண்ணியம்... இப்போ அனுபவிக்கிறான்...' என்று சொல்கின்றனர் அல்லவா? அந்த பூர்வஜென்ம புண்ணியம், இப்போது அவனுக்கு உதவுகிறது.  பாவம் செய்திருந்தால் அதற்குண்டான வேதனையை அனுபவிக்கிறான். இரண்டையும் நாமே தான் சம்பாதித்துக் கொள்கிறோம்.       பரலோகத்தில் யம தர்மனிடம் கொண்டு போய் நிறுத்துவர். அங்கே பொய் சொல்ல முடியாது; சிபாரிசு கடிதம் செல்லுபடியாகாது. இவன் செய்த பாவ, புண்ணியங்கள் தான் முன்னால் வந்து நிற்கும். சேர்த்து வைத்த பணமோ, நகை நட்டோ, கார், பங்களாவோ, மனைவி, மக்களோ யாரும் உதவ முடியாது. அவைகளெல்லாம் இந்த உலகத்தோடு சரி. 
அதனால், வாழ்க்கை என்பதில் கடமைகள் என்பதும் உண்டு. தனக்காக, பரலோக சுகத்துக்காக செய்து கொள்ளும் புண்ணியங்களும் உண்டு. வீடு, மனைவி, மக்கள் என்றே எப்போதும் சொல்லிக் கொண்டு உயிரை விட்டால் மனித ஜென்மா வீண் தான். கூடவே தர்மம், தானம் என்பதிலும் சிரத்தை இருக்க வேண்டும்.   "அடடா... இவ்வளவு சம்பாதித்தோமே... இவ்வளவு சேர்த்து வைத்தோமே... ஒரு தானம் செய்தோமா? ஒரு தர்மம் செய்தோமா? ஒரு கோவிலுக்குப் போனோமா? ஒரு அதிதிக்கு சாப்பாடு போட்டோமா?' என்று பரிதாபப்பட வேண்டும். அவ்வப்போது எது முடியுமோ அந்த புண்ணியத்தை சேர்த்து விட வேண்டும். இப்படி சேர்த்த புண்ணியம் இவனை கை தூக்கி விடும்; காப்பாற்றும்.
இந்த புண்ணியத்தில் மனைவியோ, மக்களோ, பந்துக்களோ, நண்பர்களோ பங்கு கேட்க முடியாது; யாராலும் அபகரிக்க முடியாது. இவன் சம்பாதித்த புண்ணியம் இவனுக்குத் தான். அது மட்டுமல்ல... இவன் செய்த புண்ணியத்தின் பலனை இவனது சந்ததியினர் அனுபவிக்க முடியும். "தாத்தா செய்த புண்ணியம், அப்பா செய்த புண்ணியம் ஏதோ சவுக்கியமாக இருக்கிறேன்...' என்று பேரனும், பிள்ளையும் சொல்வர். 
அதனால், ஏதாவது புண்ணிய காரியம் செய்து, புண்ணியத்தைச் சேர்த்து வைக்க வேண்டாமா? இது தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும். அப்போது தான் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரும் சவுக்கியமாக இருக்க முடியும். "ஏமாந்து விடாதே தர்மம் செய், புண்ணியத்தை சேர்த்து வைத்துக் கொள்...' என்றனர்.  யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.                                                                 

1 comment:

  1. puniyathai ethir paarthu seiythaal athil palane illai entru puraanangal koorukintrana. aagave paavathirkaaga punniyam thedaamal (serkaamal)iraivinirkaaga seiyungal 1 nru 2ndaaga maarum. baargava puraanam

    ReplyDelete