Friday, August 23, 2013

ஒரு தரம் ஒரே தரம்!

"முருகா...' இப்படி ஒரு தடவை சொன்னால் போதும். செய்த பாவமெல்லாம் விலகியோடி விடும். முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று, அந்தப் பெருமானின் திருநாம மகிமையை அறிந்து கொள்வோம். கங்கை கரையில் முனிவர் ஒருவர், கரையோரத்தில் கிடைத்த இலைகளைக் கொண்டு குடில் அமைத்து, வசித்து வந்தார். அவருக்கு ஏழு வயதில் ஒரு மகன். ஒருநாள், தன் தந்தையிடம், "தெய்வங்களிலேயே உயர்ந்தவர் யார்?' என்று கேட்டான்.
"அதிலென்னப்பா சந்தேகம். முருகப்பெருமானே உயர்ந்தவர். முருகனை வணங்குவோர், எல்லா தெய்வங்களையும் வணங்கிய புண்ணியம் பெறுவர். தாயின் சம்பந்த மில்லாமல் பிறந்த அபூர்வப்பிறவி. "சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிர மணியருக்கு மிஞ்சிய தெய்வ மில்லை!' என்று, நம் தேசத்தில் பலகாலமாக சொலவடை உள்ளதை, நீ அறிவாய் அல்லவா! அவரது வரலாற்றைத் தெரிவிக்கும் கந்தபுராணத்தை படிக்க படிக்க இனிக்கும். முருகனை ஆராதிப்பவர்களுக்கு பிறப்பற்ற நிலை உறுதி...' என்று புகழ்ந்து கூறினார்.

தந்தையின் வார்த்தைகள், அந்த பிஞ்சு மனதில் பதிந்தன. அன்று முதல், முருகப்பெருமானின் திருநாமம் சொல்லியே தியானிக்க ஆரம்பித்தான். ஒருமுறை, முனிவர், பக்கத்து ஊரில் நடந்த யாகத்துக்கு கிளம்பி விட்டார். வீட்டில் தனியாக இருந்தான் மகன். அப்போது ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒருவன், குடிலை நோக்கி தேரில் வந்தான். சிறுவனிடம், "தம்பி... இங்கிருக்கும் முனிவர் எங்கே?' என்றான்."அன்பரே... நீர் யார்?' "நான் இந்நாட்டின் மன்னன்...' "அப்படியா, நீர் தேடி வந்தவர் என் தந்தை, ஒரு யாகத்திற்காக வெளியூர் சென்றுள்ளார். அவரிடம் என்ன கேட்க நினைத்தீரோ, அதை என்னிடம் கேட்கலாம்...' "தம்பி... நீ சிறுவன். என் பிரச்னையை உன்னிடம் சொல்லி என்னாகப் போகிறது?'

"அப்படி நினைக்காதீரும். இருள் சூழ்ந்த வீட்டிற்குள், ஒரு சிறுவன் விளக்கை எடுத்து வந்தால், அந்த விளக்கு வெளிச்சம் தராதா என்ன? சிறுவன் என்பதால் மறுத்து விடுமா? நான், உம் பிரச்னையைத் தீர்த்து வைப்பேன், தைரியமாகச் சொல்லும்...' "தம்பி... நான் மிருகங்களை வேட்டையாடும் போது, தவறுதலாக ஒரு பாணம் முனிவர் மீது பாய்ந்து இறந்து போனார். சாதுவைக் கொன்ற பாவத்தால், பிரம்மஹத்தி தோஷம் பீடித்துள்ளது. இதிலிருந்து விடுபட வழி வேண்டும்...' "இதற்கா இவ்வளவு கலக்கம். கங்கையில் இறங்கி, வடக்கு நோக்கி நின்று, "ஓம் முருகா' என்று, மூன்று முறை சொல்லும். கொலைப் பாவத்தையும் நீக்கும் சக்தி அந்த மந்திரத்துக்கு உண்டு...'

சிறுவனின் அறிவுரையை ஏற்ற மன்னன், அதன்படியே செய்ய, பிரம்மஹத்தி விலகி மகிழ்வுடன் சென்றான்.வீடு திரும்பிய முனிவர், அங்கே தேர்சக்கர தடம் இருப்பதைக் கண்டு, அங்கு யார் வந்தது என்பது பற்றி மகனிடம் விசாரித்தார். மகனும் நடந்ததைச் சொல்ல, முனிவருக்கு கோபம் வந்து விட்டது. "அட மூடனே... முருக மந்திரத்தின் பெருமை தெரியாதவனே. ஒரு தரம்... ஒரே ஒரு தரம், "முருகா' என்று சொன்னாலே, ஆயிரம் பிரம்மஹத்திகள் ஓடி விடுமே. நீ மூன்று முறை சொல்லும்படி கூறி, அதன் மகிமையைக் கெடுத்து விட்டாயே. மறுபிறவியில், நீ வேடனாகப் பிறப்பாய். முருகனின் திருநாமமான, "குகன்' என்ற பெயர் தாங்கி, இதே கங்கைக்கரையில் படகோட்டியாய் இருப்பாய். விஷ்ணு, ராமாவதாரம் எடுத்து வந்து, உனக்கு அருள்பாலித்த பிறகே, நீ முக்தி பெறுவாய்...' என்றார். அந்தச் சிறுவனே, குகன் என்ற பெயரில் பிறந்து, காட்டுக்கு ராமன் வந்த போது, கங்கையைக் கடக்க உதவினான்.

முருகன் திருநாமத்தின் மகிமையை பார்த்தீர்களா! தினமும் ஒருமுறை, "முருகா' என்று சொல்லுங்கள். அளப்பரிய நன்மைகளைப் பெறுங்கள். முருகன் நமக்களிக்கும் பிறந்தநாள் பரிசு இது தான்! 
***

No comments:

Post a Comment