Wednesday, November 8, 2017

தெய்வ அருளை கெட்டதுக்கு பயன்படுத்தலாமா?

அசுர வீரர்களில் ஒருவன், வலன்; அளவற்ற சிறப்புகளையும், உயர்வையும் வேண்டி, சிவபெருமானை நோக்கி, கடும் தவம் செய்தான். 
அவன் தவத்தில் மகிழ்ந்து, அவனுக்கு காட்சியளித்தார், சிவபெருமான். 
சிவபெருமான் திருவடிகளில் விழுந்து வணங்கிய வலன், தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டு, வரம் வேண்டினான். 
அவன் வேண்டிய வரத்தை தந்து, அருளினார், சிவபெருமான். 
வரம் பெற்ற அகந்தையில், மனிதர்களை மட்டுமல்லாது, தேவர்களையும் ஆட்டிப் படைத்தான். அதேசமயம், தன் குலத்தவரான அசுரர்களுக்கு, குளிர்ந்த நீரைப் போல இருந்தான். 
வலனுடன் மோதி, வெல்லக் கூடியவர்கள் யாரும் இல்லாது போயினர். தேவர்கள் கூட, வலனிடம் போரிட்டு தோற்றனர். 

இதனால், அவனை வதம் செய்யும் நோக்கத்துடன், வலனைத் தேடி வந்த தேவேந்திரன், 'அசுர சிரேஷ்டனே... உன் ஆற்றல் என்னை வியக்க வைக்கிறது; உன் விருப்பத்தை நிறைவேற்றி, உனக்கு அருள் வழங்கவே வந்துள்ளேன்...' என்றார். 
அதைக் கேட்டு, இகழ்ச்சியாக சிரித்த வலன், 'தேவேந்திரா... உன்னை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை. அப்படியிருக்க, நீ, எனக்கு வரம் வழங்க வந்தாயா... மூடனே... உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்; நான் உனக்கு தருகிறேன்...' என்றான், ஆணவத்துடன்!

தன் எண்ணம் பலித்ததில், உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்த தேவேந்திரன், அதை வெளிக் காட்டாமல், ' நீ சொல்வதும் சரி தான்; உன்னைப் போன்ற மகா வீரர்களிடம் பெறக் கூடிய வரம் சாதாரணமாக இருக்கக் கூடாது. ஆகையால்...' என, தேவேந்திரன் பேசும் போதே இடைமறித்த வலன், 'தயங்க வேண்டாம்; என்ன வேண்டுமானாலும் கேள்; தருகிறேன்...' என்றான்.

'வலனே... நான் ஒரு யாகம் செய்யவிருக்கிறேன்; அந்த யாகத்தில், யாகப் பசுவாக நீ இருக்க வேண்டும்...' என்றார். வேறு வழியில்லாத நிலையில், அதற்கு இணங்கிய வலன், யாகத்தில் உயர் துறந்தான். 
இந்த வலனைப் போல் தான் நாமும், தெய்வ அருளால் நமக்கு கிடைக்கும் பொன், பொருளை வைத்து நல்லவிதமாக வாழாமல், ஆட்டம் போட்டு அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து, நம் முடிவை நாமே தேடிக் கொள்கிறோம்!

Friday, June 2, 2017

பிராணிரோதம்-16



பிராணிரோதம்:பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது.

 இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள். 

பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்

Monday, May 29, 2017

மறைத்ததும், வெளிப்பட்டதும்!


மண்டலிகராஜன் என்ற ஒரு அரசர் இருந்தார்; அவர் மனைவி சுலக் ஷணி. இறை பக்தி நிறைந்தவள்.
பாகவதர்களை வரவேற்று உபசரித்து, அவர்களிடம் பகவானை பற்றி கேட்பதில் ஆர்வம் மிகுந்தவள். 
ஆனால், அரசரோ, சிறிதும் பக்தி இல்லாதவர். இதனால், நாட்டு மக்கள், அரசியை புகழ்ந்தும், அரசரை, இறை பக்தி இல்லாதவர் என்று இகழவும் செய்தனர். 

அதை அறிந்த அரசி, மனவருத்தம் அடைந்து, கணவரிடம், 'இறை பக்தி இல்லாத மன்னன் என்று நாட்டு மக்கள் இகழ்வது உங்கள் காதுகளில் விழவில்லையா... ஏன், இப்படி தெய்வ சிந்தனையே இல்லாமல் இருக்கிறீர்கள்...' என்று கேட்டாள். 
மன்னரோ, 'என் புலன்கள் அலை பாயும் தன்மை கொண்டவை; அப்படி இருக்கையில், எப்படி, இறை சிந்தனையில் ஈடுபட்டு, பக்தியில் ஆழ்வது...' என்றார். 
'இதற்கு மேல் வற்புறுத்துவதில் பலன் இல்லை...' என்று அமைதியாகி விட்டாள், அரசி.

ஒருநாள் இரவு, தூக்கத்தில், 'ராம... ராம...' என்றார் அரசர். 
அக்குரல் கேட்டு விழித்த அரசி, அரசர் தூக்கத்தில் ராம நாமாவை சொல்வதைக் கேட்டதும், மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விட்டாள். 
உடனே, அமைச்சரை அழைத்து, 'நாளை, கோவில்களில் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்...' என, உத்தரவிட்டாள்.
அவ்வாறே, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார், அமைச்சர். பொழுது விடிந்ததும், நகர் முழுவதும் நிலவும் விழாக் கோலாகலத்தை கண்ட மன்னர், அமைச்சரை அழைத்து காரணம் கேட்டார்.

'மன்னிக்க வேண்டும் மன்னா... அரசி உத்தரவிட்டார்; செய்தேன். அவர்களும் காரணம் சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை...' என்றார். 
ஆர்வம் மிகுதியான அரசர், இதுபற்றி அரசியிடம் கேட்ட போது, 'தெய்வ சிந்தனையே இல்லாத நீங்கள், நேற்றிரவு தூக்கத்தில், ராம நாமத்தை கூறினீர்கள். உங்கள் வாயில், தெய்வ நாமா வந்ததற்காகவே, இந்த கோலாகலங்களை ஏற்பாடு செய்தேன்...' என்றாள், அரசி. 
திடுக்கிட்டு, 'என்ன... என் உள்ளத்தில், நான் செலுத்தி வந்த ராம பக்தி, வெளியில் தெரிந்து விட்டதா...' என்று கேட்டவர், அப்படியே கீழே சாய்ந்தவர், இறைவனடி சேர்ந்தார். 

கணவரின் தூய்மையான பக்தியும், கனவில் கூட தெய்வத்தை மறக்காத அவரது இறை சிந்தனையையும் கண்ட அரசி, 'தான் பக்தி செலுத்துவது, அடுத்தவருக்கு கூட தெரியக்கூடாது என்றிருந்த இவரல்லவா, உத்தம பக்தர்...' என, கூறியபடியே, கணவர் மீது விழுந்து, இறைவனடி சேர்ந்தாள்.

நாம் செய்யும் வழிபாடோ, பக்தியோ, அது இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, பிறருக்கு விளம்பரப்படுத்த அல்ல!

குரு உபதேசித்த மந்திரம், வருமானம் மற்றும் கணவன் - மனைவியருக்கு இடையேயுள்ள உறவு ஆகியவை வெளியே தெரியக்கூடாது என்பர். 

Monday, May 15, 2017

பூபோதம்-15

கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூபோதம்.

சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.