Monday, May 29, 2017

மறைத்ததும், வெளிப்பட்டதும்!


மண்டலிகராஜன் என்ற ஒரு அரசர் இருந்தார்; அவர் மனைவி சுலக் ஷணி. இறை பக்தி நிறைந்தவள்.
பாகவதர்களை வரவேற்று உபசரித்து, அவர்களிடம் பகவானை பற்றி கேட்பதில் ஆர்வம் மிகுந்தவள். 
ஆனால், அரசரோ, சிறிதும் பக்தி இல்லாதவர். இதனால், நாட்டு மக்கள், அரசியை புகழ்ந்தும், அரசரை, இறை பக்தி இல்லாதவர் என்று இகழவும் செய்தனர். 

அதை அறிந்த அரசி, மனவருத்தம் அடைந்து, கணவரிடம், 'இறை பக்தி இல்லாத மன்னன் என்று நாட்டு மக்கள் இகழ்வது உங்கள் காதுகளில் விழவில்லையா... ஏன், இப்படி தெய்வ சிந்தனையே இல்லாமல் இருக்கிறீர்கள்...' என்று கேட்டாள். 
மன்னரோ, 'என் புலன்கள் அலை பாயும் தன்மை கொண்டவை; அப்படி இருக்கையில், எப்படி, இறை சிந்தனையில் ஈடுபட்டு, பக்தியில் ஆழ்வது...' என்றார். 
'இதற்கு மேல் வற்புறுத்துவதில் பலன் இல்லை...' என்று அமைதியாகி விட்டாள், அரசி.

ஒருநாள் இரவு, தூக்கத்தில், 'ராம... ராம...' என்றார் அரசர். 
அக்குரல் கேட்டு விழித்த அரசி, அரசர் தூக்கத்தில் ராம நாமாவை சொல்வதைக் கேட்டதும், மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விட்டாள். 
உடனே, அமைச்சரை அழைத்து, 'நாளை, கோவில்களில் விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்...' என, உத்தரவிட்டாள்.
அவ்வாறே, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தார், அமைச்சர். பொழுது விடிந்ததும், நகர் முழுவதும் நிலவும் விழாக் கோலாகலத்தை கண்ட மன்னர், அமைச்சரை அழைத்து காரணம் கேட்டார்.

'மன்னிக்க வேண்டும் மன்னா... அரசி உத்தரவிட்டார்; செய்தேன். அவர்களும் காரணம் சொல்லவில்லை; நானும் கேட்கவில்லை...' என்றார். 
ஆர்வம் மிகுதியான அரசர், இதுபற்றி அரசியிடம் கேட்ட போது, 'தெய்வ சிந்தனையே இல்லாத நீங்கள், நேற்றிரவு தூக்கத்தில், ராம நாமத்தை கூறினீர்கள். உங்கள் வாயில், தெய்வ நாமா வந்ததற்காகவே, இந்த கோலாகலங்களை ஏற்பாடு செய்தேன்...' என்றாள், அரசி. 
திடுக்கிட்டு, 'என்ன... என் உள்ளத்தில், நான் செலுத்தி வந்த ராம பக்தி, வெளியில் தெரிந்து விட்டதா...' என்று கேட்டவர், அப்படியே கீழே சாய்ந்தவர், இறைவனடி சேர்ந்தார். 

கணவரின் தூய்மையான பக்தியும், கனவில் கூட தெய்வத்தை மறக்காத அவரது இறை சிந்தனையையும் கண்ட அரசி, 'தான் பக்தி செலுத்துவது, அடுத்தவருக்கு கூட தெரியக்கூடாது என்றிருந்த இவரல்லவா, உத்தம பக்தர்...' என, கூறியபடியே, கணவர் மீது விழுந்து, இறைவனடி சேர்ந்தாள்.

நாம் செய்யும் வழிபாடோ, பக்தியோ, அது இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, பிறருக்கு விளம்பரப்படுத்த அல்ல!

குரு உபதேசித்த மந்திரம், வருமானம் மற்றும் கணவன் - மனைவியருக்கு இடையேயுள்ள உறவு ஆகியவை வெளியே தெரியக்கூடாது என்பர். 

No comments:

Post a Comment